இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
அதன்படி இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்க்கில் குறிப்பாக எமது தீவக பிரதேச கடற்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர்.
இதை தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதிக்கிறங்கி போராட தீர்மானித்துள்ளோம்.
அதனடிப்படையில் தீவக கடற்றொழில் அமைப்புக்களான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்றும் எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக போராட்டத்தினை ஆரம்பித்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கவுள்ளோம்.
மேலும் எமது இந்த போராட்டத்துக்கு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தை வலுவூட்டுமாறு அழைப்பு விடுகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்