உக்ரேனில் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் திங்களன்று (24) நடந்த சந்திப்புக்கு பின்னர், இரு தலைவர்களும் ஒரு கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கெடுத்து உரையாற்றும் போது மக்ரோன் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
உக்ரேனில் அமைதியை நிலைநிறுத்துவதற்கான செலவையும் சுமையையும் அமெரிக்கா மட்டும் செலுத்தாமல் ஐரோப்பிய நாடுகளே செலுத்த வேண்டும் என்று இதன்போது ட்ரம்ப் வலியுறுத்தினார்.
பாதுகாப்புச் சுமையை மிகவும் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா புரிந்துகொண்டதாக பதிலளித்த மக்ரோன், ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு பற்றிய பேச்சுக்கள் முன்னோக்கி செல்லும் பாதையைக் காட்டியுள்ளன என்றும் கூறினார்.
திங்கட்கிழமை முழுவதும் இரு தலைவர்களும் நட்பு ரீதியான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டாலும், ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து சில தெளிவான வேறுபாடுகள் வெளிப்பட்டன.
எந்தவொரு சமாதான உடன்படிக்கையிலும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உள்ளடக்கம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான அடுத்த படிகள் போன்ற வேறுபாடுகளின் ஒரு பகுதியாகும்.
விரைவில் போர்நிறுத்தம் செய்ய விரும்புவதாகக் கூறிய ட்ரம்ப், அதன் முன்னேற்றத்துக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க மொஸ்கோ செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.
எவ்வாறெனினும் மக்ரோன், உக்ரேனை நீண்டகாலமாக பாதுகாப்பதற்கான உத்தரவாதங்களை உள்ளடக்கிய ஒரு போர் நிறுத்தம் மற்றும் பின்னர் ஒரு பரந்த சமாதான ஒப்பந்தத்தை உள்ளடக்கிய மிகவும் கருதப்பட்ட அணுகுமுறையை முன்வைத்தார்.
ரஷ்யாவுடனான விரைவான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான ட்ரம்பின் முயற்சியில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிளவை அம்பலப்படுத்தியது.
கடந்த வாரம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சர்வாதிகாரி என்று கூறிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.