வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை (28)நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக கைபர் பக்துன்க்வா பொலிஸாரின் தகவல்களை மேற்கொள்காட்டி பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெஷாவருக்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் (35 மைல்) தொலைவில் உள்ள அகோரா கட்டாக்கில் உள்ள தார்-உல்-உலூம் ஹக்கானியா பள்ளியில் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்துக்கு பதிலளிக்கும் விதமாக, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 45 நிமிடங்கள் தொலைவில் உள்ள பெஷாவரின் லேடி ரீடிங் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க மருத்துவ நிலையத்தில் உயர் எச்சரிக்கை மற்றும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், முதற்கட்ட தகவல்களின்படி தற்கொலைப்படை தாக்குதல் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதுவரை மூன்று முதல் நான்கு பேர் இறந்ததாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.
அதே நேரத்தில் 10 முதல் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வெடிப்பு நடந்த இடத்தில் காவல்துறை குழுக்கள் இருப்பதாகவும், சுற்றுப்புறங்களிலும் தேடுதல் நடந்து வருகின்றன.
சம்பவ இடத்திற்கு தடயவியல் மற்றும் புலனாய்வு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.