வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அதன்படி வத்தளை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு காய்கறிகளை ஏற்றி வந்த, குளிரூட்டப்பட்ட லொறியொன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த லொறியின் சாரதி தேநீர் அருந்துவதற்காக பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள ஒரு இரவு உணவகத்தின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தியிருந்தபோது, சந்தேக நபர் அந்த லொறியை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வீதித் தடைகளை அமைத்து லொறியை நிறுத்த முயற்சித்த போதிலும், சந்தேக நபர் லொறியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.
அதன்படி, பொலிஸார் லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன் அந்த சந்தர்ப்பத்தில், சந்தேக நபர் லொறியில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.