கனடா மற்றும் மெக்ஸிகோ மீதான 25% வரிகளிலிருந்து ஒரு மாதத்திற்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள சுதந்திர வர்த்தக விதிகளை அவர்கள் பின்பற்றினால், வாகன உற்பத்தியாளர்களுக்கு 25% வரி விலக்கு அளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை (05) தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்த வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய பிற தயாரிப்புகள் குறித்தும் ட்ரம்ப் செவி சாய்க்கத் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ஆனால், கனடா மற்றும் மெக்சிகோவுடனான தனது வர்த்தகப் போரை நிறுத்தப் போவதில்லை என்றும் ட்ரம்ப் தெளிவுபடுத்தினார்.
ஏனெனில், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இரு நாடுகளுக்கும் அவர் அழுத்தம் கொடுக்கிறார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர், நிலைமை மேம்பட்டுள்ளதாக தான் நம்பவில்லை என்று ட்ரம்ப் கூறினார்.
பொது தரவுகளின்படி, அமெரிக்காவில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருளிலும் 0.2% மட்டுமே கனேடிய எல்லைக்கு அப்பால் இருந்து வருகிறது, அதே நேரத்தில் பெரும்பான்மையானவை தெற்கு எல்லையிலிருந்து வருகின்றன.
ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள சில வரிகளைக் குறைத்தால், அமெரிக்க வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா தனது நடவடிக்கைகளைக் குறைக்கத் தயாராக உள்ளது என்று கனேடிய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஒட்டாவாவிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒரு மாத கால அவகாசம் ஆட்டோ மொபைல் பங்குகளில் மீட்சியைத் தூண்டியது, ஆனால் வர்த்தக பதட்டங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி நுகர்வோர் நம்பிக்கையைக் குறைத்துள்ளன, இது சமீபத்திய நாட்களில் பங்குகளில் விற்பனைக்கு வழிவகுத்தது.
இதேவேளை, மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோல் போன்ற கனேடிய எரிசக்தி இறக்குமதிகள் மீதான 10% வரியையும் ட்ரம்ப் நீக்கக்கூடும் என்று விவாதங்களை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் புதிய வரிகள் மூன்று வர்த்தக கூட்டாளிகளுக்கிடையேயான உறவுகளை சேதப்படுத்தியுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க இறக்குமதிகள் மீது கனடா தனது சொந்த வரிகளை விதித்துள்ளது, அதே நேரத்தில் மெக்சிகோவும் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.
மெக்சிகன் அரசு எண்ணெய் நிறுவனமான பெமெக்ஸ், ட்ரம்பின் வரிகளுக்குப் பிறகு அதன் கச்சா எண்ணெய்க்கு மாற்று சந்தைகளைத் தேடுவதால், சீனா உட்பட ஐரோப்பா மற்றும் ஆசியாவில் சாத்தியமான வாங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மெக்சிகன் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெமெக்ஸின் ஏற்றுமதி செய்யப்பட்ட பீப்பாய்களில் கிட்டத்தட்ட 60% கடந்த ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.