பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரத்துக்குள்
நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் தெரிவித்துள்ளார்
இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்தாா்.
இதேவேளை பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்வும் வலியுறுத்தியிருந்தார்
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தாா்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலையடுத்து, பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை மீண்டும் பேசுபொருளானது.
மேலும் அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்தமை அல்லது காணாமலாக்கியமை தொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் கண்டு பரிந்துரை செய்வதே இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது