பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு நாள் நீடித்த தீவிர இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர், முற்றுகை முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை (12) மாலை தெரிவித்துள்ளது.
எனினும், பலூச் விடுதலை இராணுவத்தால் (BLA) இருபத்தொரு பயணிகளும் நான்கு துணை இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் இருந்த 33 கிளர்ச்சியாளர்களையும் அழித்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தான் ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
“அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்று, மீதமுள்ள பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டதன் மூலம் (புதன்கிழமை) மாலையில் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன” என்று லெப்டினன்ட் ஜெனரல் அகமட் ஷெரீப் கூறினார்.
கிளர்ச்சியாளர்கள் 60 பணயக்கைதிகளைக் கொலை செய்ததாக கூறிய சிறிது நேரத்திலேயே இராணுவத்தின் அறிக்கை வந்தது.
மேலும், இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால் மேலும் பலரைக் கொலை செய்வதாக பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்தனர்.
பணயக்கைதிகளுக்கு ஈடாக பலூச் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர்.
செவ்வாய்க்கிழமை (11) ஒன்பது பெட்டிகளில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், குவெட்டாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள மலைப்பகுதிகளில் வெடிபொருட்களால் குறி வைத்து தாக்கப்பட்டது.
இதையடுத்து, பலூச் விடுதலை இராணுவத்தால் பயணிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.
ரயில் தாக்குதலைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் உட்பட பல முனை தாக்குதலை பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.
மீட்கப்பட்ட நபர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அவர்களை கிளர்ச்சியாளர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தினர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட உள்ளாடைகளை அணிந்த கிளர்ச்சியாளர்கள், பெண்களையும் குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து அருகில் உட்கார வைத்தனர், இதனால் மீட்பு நடவடிக்கை கடினமாக இருந்தது என்று அதிகாரிகள் முன்பு தெரிவித்தனர்.
எவ்வாறெனினும், பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்ட பயணிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் காயமடைந்தவர்கள் மாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய பாதுகாப்பு அதிகாரிகள், நடவடிக்கை முடிவடைந்ததால் 300 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், அவர்கள் பயணிகள் ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை.
பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற வேண்டும் என்று வாதிடும் பல்வேறு எதிர்ப்புக் குழுக்கள், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக புதிய தீவிரமான தாக்குதலை அறிவித்து, பலூச் தேசிய இராணுவம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் நடந்தது.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையாக அமைந்துள்ள பலூசிஸ்தான், பல ஆண்டுகளாக கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அண்மையில் பல பயங்கரவாத தாக்குதல்களையும் சந்தித்துள்ளது.
கிளர்ச்சிக் குழுக்கள் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பலூசிஸ்தானின் சுதந்திரத்தை நாடுகின்றன.
பாகிஸ்தான் அரசாங்கத்தால் தாங்கள் பாகுபாடு மற்றும் சுரண்டலை எதிர்கொள்வதாக பலூச் சிறுபான்மையினர் கூறுகின்றனர்.