பமுனுகம, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒனறில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருந்துபசார நிகழ்வானது சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஹோட்டலில் இன்ஸ்டாகிராம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் போபை்பொருள் பாவனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை பயன்படுத்திக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர்.
அதேநேம், போதைப்பொருள் வைத்திருந்த 16 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், விருந்து இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 03 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள், கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.