இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 9 (05.01.2025)
கீழடியைப் பார்வையிட்டு நெகிழ்ந்த உள்ளங்களுடன் புறப்பட்ட எமது ‘ வேர்களைத்தேடி’ … பண்பாட்டுப் பயணம் காரைக்குடியை அடைந்தபோது இரவாகியிருந்தது . காரைக்குடியிலுள்ள பழைமையான பிரமாண்ட இல்லம் ஒன்றில் நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த் திரைப்படங்களில் காணும் பண்ணையார் இல்லமொன்றை நினைவுபடுத்தும் வகையில் அவ் இல்லம் அமைந்திருந்தது.

பழமையும் புதுமையும் கலந்த கலவையொன்றாக அறைகள் மற்றும் அதன் ஏனைய பகுதிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. நவீன சமையலறைகளில் வழக்கொழிந்துபோன உரல் , உலக்கை , அம்மி, குளவி போன்றவற்றை வரவேற்பறையில் காட்சிப் பொருட்களாக ஒழுங்கமைத்திருந்தனர். பங்கேற்பார்கள் ஒவ்வொருவரும் தம் பயணக்களைப்பை மறந்து உற்சாகமாக அவ் இல்லத்தினைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
எனினும் எதனையும் இரசிக்கவோ அனுபவித்து மகிழவோ இயலாதபடி எனது உடல் நலம் குன்றியிருந்தது. அறையினுள் நுழைந்து படுக்கையைத் தஞ்சமடைந்து விட்டேன்.
எனக்கான இரவுணவை என்னோடு அறையில் தங்கியிருந்த சகோதரி துளசி அறைக்கே எடுத்து வந்ததுடன் உடன் பிறந்த ஒருவரைப்போன்று அந்த உணவை பிடிவாதமாக என்னை உண்ணவைத்தது என்னால் என்றுமே மறக்க முடியாத அனுபவங்கள்.
பொழுது புலர்ந்ததும் உடல் உபாதை காரணமாகத் தாமதமாகவே எழுந்திருந்தேன். பங்கேற்பாளர்கள் அனைவரும் அடுத்த பயணத்துக்குத் தயாராகியிருந்தனர். அவசரஅவசரமாகக் குளித்துத் தயாராகி கானாடு காத்தான் அரண்மனை நோக்கிய பண்பாட்டுப் பயணத்தில் இணைந்து கொண்டேன்.
வாசக நேயர்களுக்காக கானாடுகாத்தான் அரண்மனை தொடர்பான எனது இணையவழித் தேடலை முன்வைக்கிறேன்.
கானாடு காத்தான் அரண்மனை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் காநாடு காத்தான் என்னும் ஊரில் உள்ள ஒரு மாளிகை இதுவாகும். இது செட்டிநாட்டு அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. சிவகங்கை நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்குடியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இது உள்ளது.
இந்த அரண்மனையானது ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் 1912 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. கண்களைக் கவரும் வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அரண்மனையின் கட்டுமானப்பணி ஏழு ஆண்டுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த அரண்மனை செட்டிநாட்டின் பாரம்பரிய கட்டிடக்கலையை வெளிப்படுத்துகின்ற ஒரு சான்றாக அமைந்துள்ளது.
கலை , கட்டிடக்கலை, பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவையாக அமைந்துள்ளதுடன் செட்டிநாட்டு மக்களின் சிறந்த பண்பாட்டின் பெருமையை வெளியுலகிற்கு வெளிப்படுத்துகின்ற மிக உயரிய உதாரணமாகவும் இது காணப்படுகிறது.
செட்டியார்களின் விருப்பத்திற்குரிய பாரம்பரிய பாணியே இந்த அரண்மனையெங்கும் விரவிக் கிடக்கின்றது. அலங்கார விளக்குகள் , தேக்குமரச் சாமான்கள், பளிங்குக் கற்கள், கண்ணாடிகள், கம்பளங்கள், ஸ்படிகங்கள் போன்றவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இவ் அரணமனை வெவ்வேறு வகையான கலை மற்றும் பாணிகளைக் கொண்டு அமைந்துள்ள நிலையில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி , கோதமங்களம் பகுதிகளில் காணப்படுகின்ற செட்டிநாட்டு வீடுகள் மிகுந்த வேலைப்பாடு கொண்டவையாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் பல வீடுகள் இறக்குமதி செய்யப்பட்ட உயர்வகை மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றவையாக அமைந்துள்ளன. எனினும் கானாடு காத்தான் அரண்மனையில் இத்தகைய வேலைப்பாடுகள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன.
இந்த அரண்மனையைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அரண்மனையில் விலை உயர்ந்த தேக்கு, பளிங்கு அல்லது கிரானைட்டால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் உள்ளன.
இந்த அரண்மனை அகண்ட தாழ்வாரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. பொதுவாகவே இதுபோன்ற அமைப்பு இப்பகுதியில் காணப்படுகின்ற அனைத்து கட்டடங்களிலும் காணப்படுகின்ற சிறப்புக்கூறு ஆகும்.
இந்த அரண்மனையின் கட்டிடக்கலை குறித்து பல்வேறு ,நாடுகளைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். அரண்மனையின் முன்புறத்தில் அனைவரையும் வரவேற்கும் வகையில் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலமான திண்ணைகள் காணப்படுகின்றன, இத்திண்ணைகளில் காணப்படும் கம்பீரமான மரத்தூண்கள் பண்பாட்டு அடையாளமாகவே காணப்படுகின்றன.. பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரப்பலகையில் செய்யப்பட்ட கதவுகளும் ஜன்னல்களும் கலையம்சத்தை உணர்த்துகின்றன.
இல்லத்தில் நடைபெறுகின்ற கல்யாணச்சடங்குகள் மற்றும் மதம் சார்ந்த சடங்குகள் அங்கு காணப்படுகின்ற அகன்ற முற்றத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. முற்றத்தின் ஒரு மூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரின் மனைவி பூசை செய்த பூசை அறை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் அரச குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த பல பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த அரண்மனையில் 1990 சதுரஅடியில் 9 கார்களை நிறுத்தும் அளவுக்கு வசதிகள், மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளது. மாளிகையின் வெளிப்புற மதிற்சுவரில் குதிரைகளை நிறுத்திவைப்பதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் தொடங்கி மற்றொரு தெருவில் முடியும் அளவிற்கு மாளிகை விஸ்தாரமுடையதாகக் காணப்படுகிறது.
………………………..
எமது பண்பாட்டுப் பயணம் கானாடு காத்தான் அரண்மனையை வந்தடைந்ததும் அதன் வெளிப்புறத் தோற்றத்தைக் கண்டு மலைத்து நின்றோம். இவ்வாறான ஓர் அரண்மனையை நேரில் தரிசிப்பதென்பது எனது வாழ்வில் கிடைத்த முதல் அனுபவம் ஆகும்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எமக்குக் கிடைத்த பல இன்ப அனுபவங்களின் வரிசையில் இந்த அரண்மனைத் தரிசனமும் இணைந்து கொண்டது.
வாகனத்தை விட்டிறங்கி அரண்மனையுள் நுழைந்தபோது எனது உடல் உபாதையையும் மறந்து மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. செட்டிநாட்டின் வரலாற்றுச் செழுமையைப் பிரதிபலிக்கும் கானாடுகாத்தான் அரண்மனை வாசலில் வைத்து அங்குள்ள அலுவலர்களால் வரவேற்கப்பட்டோம்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ரோஜாப்பூக்கள் வழங்கி வரவேற்றதோடு . அரண்மனையின் சிறப்புக்களையும் எமக்கு எடுத்துரைத்தனர். பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான இடங்களில் நின்று அந்த இனிய அனுபவத்தை புகைப்படம் எடுத்து பதிவு செய்து கொண்டனர்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் அரண்மனையைச் சுற்றிச் சுற்றிவந்து புகைப்படமெடுத்து தமது பொழுதை மகிழ்வாகக் களிக்க, உடல் நலம் பாதிப்புற்ற நானோ அதனை அனுபவிக்க முடியாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தேன். புறப்படும் தருணத்தில் எமக்கு காரைக்குடி விசேட பலகாரங்கள் அடங்கிய ஒரு பரிசுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.
நாம் அங்கிருந்து புறப்பட்டபோது மதியமாகியிருந்தது. மதிய போசனத்துக்காக செட்டிநாடு மேனர் ஹோட்டலில் சுவையான செட்டிநாட்டு உணவை சுவைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அனைவரும் உணவருந்த பஸ்ஸிலிருந்து இறங்கிச்செல்ல உடல் நலம் குன்றியிருந்த நானோ உணவுண்பதில் நாட்டமின்றி பஸ்ஸில் தனித்திருந்தேன்.
மதியபோசனத்தின்பின் பாரம்பரியமிக்க ஆத்தங்குடி ரைல்ஸ் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டோம் . எனினும் மருத்துவ சிகிச்சை பெறவேண்டி நானும் சுகவீனமுற்றிருந்த சைஹானா மற்றும் ஆஸ்ச் ஆகியோர் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டோம்.
ஆத்தங்குடி ரைல்ஸ் தொழிற்சாலையைப் பார்வையிட முடியவில்லையே என்ற ஏக்கமும் மன ஆதங்கமும் இப்போதும் எனக்குண்டு. எனினும் அதனைப் பார்வையிட்ட பங்கேற்பாளர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த சகோதரன் கோபிராமின் அனுபவப் பகிர்வினை வாசகர்களுக்கு தர முயல்கிறேன்.

ஆத்தங்குடி டைல்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டு பாரம்பரியமான கைவினைத் தயாரிப்பு முறையைத் தெரிந்து கொண்டதாக கோபிராம் என்னிடம் தெரிவித்தார். செட்டிநாட்டின் கட்டிடக்கலையின் அடையாளமாக விளங்கும் இந்த டைல்ஸ்களின் முக்கியத்துவத்தை உணரமுடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மருத்துவ சிகிச்சை பெறவேண்டி தஞ்சாவூருக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்ட எமக்கு உற்ற துனையாக இருந்து உதவிய இணைப்பாளர்களான கனிமொழி மற்றும் ஷெபின் ஆகியோரை இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூருகின்றேன். அவர்கள் வழங்கிய முறையான மருத்துவசிகிச்சை மற்றும் கரிசனையுடன் கூடிய கவனிப்பும் எம்மை நோயிலிருந்து மீண்டுவர உதவியது என்ற உண்மையை நன்றியுடன் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.
………………………………..
ஆத்தங்குடி டைல்ஸ் நிறுவனத்தை பார்வையிட்ட பங்கேட்பாளர்கள் அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையிலுள்ள சித்தன்னவாசல் பகுதிக்கு பயணித்ததாக சகோதரன் கோபிராம் என்னிடம் தெரிவித்திருந்தார். அத்துடன் இது பழமையான குகைக் கோயில்களுக்கும் ஜைனர் ஓவியங்களுக்கும் பெயர்பெற்ற இடமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பங்கேற்பாளர்கள் இந்த தொல்பொருள் தளத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை ஆராய்ந்து தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரியத்தை அறிந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதற்கு இணங்க சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள் குறித்து நான் தேடிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் பெயர் பெற்றது..
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்ன வாசல் ஓவியங்கள் சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டவை. வட இந்தியாவின் அஜந்தா ஓவியங்களைப்போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 – 1200 ஆண்டுகள் பழமையானவை.
போதிய பராமரிப்பின்றி புகை படிந்திருந்த இக்குகைகளும் குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்கத் துவங்கியதால் செயற்கை வர்ணம் கொண்டு புதுப்பிக்கப்பட்டன.
தமிழக அரசின் தொல்லியல் துறை இதனைப் பாதுகாத்து வருகிறது.சுமார் 70 மீட்டர் உயரமேயுள்ள இக்குன்றுகளின்மேல் சமணர்களின் படுக்கையும் தவம் செய்யும் இடமும் , பல இடங்களில் குடவறைகளும் காணப்படுகின்றன.இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும் தமிழ்க் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.அறிவர் கோயில் எமப்படும் சமணகோயில் ஒன்றும் இங்குள்ளது.
சித்தன்னவாசலில் தமிழிக் ல்வெட்டுக்கள் காணப்படுவதால் அது முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது என்று கருதப்பட்டாலும் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டியமன்னன் சீர்செய்தான் எனக்கூறுவதால் இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி 625 – 640 ) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி(கி.பி 640 – 670) காலத்திலோ சீரமைக்கப்பட்டது என்பது உறுதியானது.
………………….
செட்டிநாடும் சித்தன்னவாசலும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் கைவினைக்கலைகளையும் தொல்பொருட்சிறப்புக்களையும் காட்சிப்படுத்துகின்றன. இந்த பொக்கிஷமான அனுபவங்களைச் சுமந்த பங்கேற்பாளர்களுடன் ‘வேர்களைத்தேடி ‘…பண்பாட்டுப் பயணம் தஞ்சாவூரை நோக்கி நகர்ந்தது.தஞ்சாவூரின் கலைப்பொக்கிஷங்களை கண்டு நெகிழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை எனது அடுத்த பதிவில் தர இருக்கிறேன் அதுவரை காத்திருப்போமா?.
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -09