இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார்.
கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது குண்டுவீச்சுக்கு உட்பட வேண்டும் என்ற எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (06) இது குறித்து பதிலளித்துள்ள அப்பாஸ் அரக்சி, “பேச்சுவார்த்தைகளை நீங்கள் விரும்பினால், அச்சுறுத்துவதன் பயன் என்ன?”, பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதில் வொஷிங்டனின் நேர்மையையும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஐ.நா. சாசனத்தை மீறி, தொடர்ந்து பலத்தைப் பயன்படுத்துவதை அச்சுறுத்தும் மற்றும் முரண்பாடான நிலைப்பாடுகளை ஏற்கும் ஒரு தரப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என்று ஈரானிய வெளிவிகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ட்ரம்பின் போர் அச்சுறுத்தலுக்கு சனிக்கிழமை பதிலளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி, நாடு போருக்கு “தயாராக” இருப்பதாகக் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தில், ஈரானுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமான கூட்டு விரிவான செயல் திட்டத்தை ட்ரம்ப் இரத்து செய்தார்.
இதன் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடாக அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்த முடிந்தது.
எனினும், ஈரான் அணுசக்தி தளங்களை ஆய்வு செய்யும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூற்றுப்படி, ஈரான் ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.