2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு நடந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகளினால் தோற்கடித்தது.
இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல்.தொடரில் டெல்லி அணி பெற்றுக் கொண்ட நான்காவது வெற்றியாகும்.
அதேநேரம், பெங்களுரு அணியின் இரண்டாவது தோல்வியாகவும் அமைந்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதற்கிணங்க, முதலில் துடுப்பெடுத்தாடிய ரஜர் பட்டிதர் தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றது.
பெங்களூரு அணி சார்பில் பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் அதிகபடியாக தலா 37 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை அதிகபடியாக கைப்பற்றினர்.
164 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியானது 58 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
எனினும், பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரின் வலுவான இணைப்பாட்டமானது டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
அதன்படி, 17.5 ஓவர்களில் டெல்லி கேபிட்டல்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.
கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கே.எல்.ராகுல் தெரிவானார்.