விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, உரிமையாளர்கள் அல்லாத தங்கத்தினை, பொது நிதியமொன்றுக்கு வழங்கி அதனூடாக தமிழர் பகுதிகளுக்கான அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்தாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றபட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கடந்த 02ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தன.
இதன்போது பதில் பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த ஆபரணங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் அதன் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்ப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கையளிக்கப்பட்டுள்ள குறித்த ஆபரணங்கள், தமிழ் மக்களால் அடைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றினை உரியவரிடம் ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.