அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிசோரி மாகாணத்தில் சென்ட் லூயிஸ் (St. Louis) நகரில் மாத்திரம் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சூறாவளி தாக்குதலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.