குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன தப்பிச் செல்ல உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளை வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு காலம் நிறைவடைந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 15(2) இன் படி வழக்கு முடியும் வரை குறித்த பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு வழக்கு தாக்கல் செய்தவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த கோரிக்கைக்கு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி எதிர்ப்பை வௌியிட்ட நிலையில்
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணை முடியும் வரை பிரதிவாதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த வழக்கு மீண்டும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், பின்னர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.