யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிகளில் கொட்டுவதை குறைக்கும் விதமாக இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கெமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போதே கழிவுகளை வீதிகளில் கொட்டுவதை குறைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையினாலும், கோப்பாய் பிரதேச சபையினாலும் கண்காணிப்பு கமரா (CC TV) பொருத்துவது. போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலாளர் ”தற்போது மழை பெய்துவருவதால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக்கூற வேண்டும். அந்த விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு கிராம மட்ட உத்தியோகத்தர்களை வழிப்படுத்த பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவகற்றல் தொடர்பாக சரியான பொறிமுறையின் ஏற்படுத்த வேண்டும்”இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இக் கூட்டத்தில் டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிகளும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.