வொஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க இராணுவத்தின் 250 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானின் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் (Asim Munir) இந்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளதாக இஸ்லமபாத் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வொஷிங்டனின் அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்கத் தலைநகரில் சனிக்கிழமை (14) நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் முனீர் தனது இருப்பை உறுதிப்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 79 வது பிறந்தநாளும் கூட.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவரது விஜயம் வந்துள்ளது.
முனீர் தனது விஜயத்தின் போது அமெரிக்க வெளிவிவகாரத்துறை மற்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உயர்மட்ட இராணுவ ஈடுபாட்டை பாகிஸ்தானோ அல்லது அமெரிக்காவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்காவின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் முனீரைப் பாராட்டிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதனிடையே, முனீருக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருப்பது இந்தியாவில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதை “இந்தியாவிற்கு மற்றொரு பெரிய இராஜதந்திர பின்னடைவு” என்று குறிப்பிட்டார்.
26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானை உலகளவில் தனிமைப்படுத்த இந்தியா இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 33 வெளிநாட்டு தலைநகரங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் முனீரின் வொஷிங்டன் விஜயத்திற்கு எதிராக பாகிஸ்தான் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி, இராணுவத் தளபதியின் வருகையின் போது அமெரிக்க தலைநகரில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


















