பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 04ஆம் திகதி குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த குற்றச்செயலுக்கு உதவி புரிந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர், நேற்று (04) இரவு பொரளை சிரிசர உயன மற்றும் வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 19 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச்செயல் தொடர்பாக இதுவரை ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.