அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார்.
முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதாக அந்த ஏற்பாட்டாளர் சொன்னார்.
இரண்டாவது சம்பவம், ஒரு முதிய தாய், ஒரு பையனின் படத்தையும் வைத்துக்கொண்டு அங்கே இருந்திருக்கிறார். அவரோடு கதைத்த பொழுது அவர் சொன்னாராம்,”நான் இது போன்ற போராட்டங்களில் இதுவரை பெரும்பாலும் பங்குபற்றியது இல்லை. இது மக்களால் மக்களுக்கு என்று கூறப்பட்டதால் நான் வந்தேன்.இது அரசியல்வாதிகளால் ஒழுங்கு செய்யப்படாத, ஆனால் மக்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஒரு போராட்டம் என்றபடியால் வந்தேன்.” என்று.மேலும், “இது போன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் நடந்தால் நான் அதற்கு வர இருக்கிறேன். யாரோடு கதைக்க வேண்டும்?” என்றும் கேட்டிருக்கிறார். அப்பொழுது அந்த செயற்பாட்டாளர் சொன்னாராம், “நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லையா?” என்று. அவர் கூறினாராம்,” இல்லை” என்று.
அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லாமலேயே ஒரு தொகுதி முதிய பெற்றோர் உண்டு. கட்சி சாரா மக்கள் போராட்டம் என்று வரும்பொழுது அவர்கள் அரங்கினுள் இறங்குகிறார்கள். இது அணையா விளக்குப் போராட்டத்துக்கு இருந்த மக்கள் பரிமாணத்தை காட்டுகிறது.
ஆனால் துயரம் என்னவென்றால், இந்த இரண்டு முதியவர்களையும் அங்கே யாரும் நேர்காணவில்லை. அவர்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே வந்திருந்திருக்கலாம். செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியாது. யாரையெல்லாம் புதைத்தார்கள் என்றும் தெரியாது. ஆனால் தங்கள் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர் நூற்றுக்கணக்கில் கிராமங்கள் தோறும் உண்டு. அவர்களிடம் போனால் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள்.அதற்குள் சில சமயம் கிளைக் கதைகளும் இருக்கும். இதில் எத்தனை கதைகள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன?
அண்மையில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் அவ்வாறு காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பான ஒர் ஆவணம் வெளியிடப்பட்டது. “ஏழுநா” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தை இயக்கியவர் ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படுகின்ற ராஜ்குமார்.
முதலில் ராஜ்குமாரை பற்றிக் கூற வேண்டும். ஏனென்றால் அவருடைய கதையும் ஒரு துயரக் கதை. சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை. ராஜ்குமார் புனர் வாழ்வு பெற்ற பின் விடுவிக்கப்பட்டவர்.இந்திய வம்சாவளியினரான வறிய தாய்க்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர். மூத்த சகோதரர் ஏற்கனவே இயக்கத்தில் இருந்துபோர்க் களத்தில் இறந்தவர்.. தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக, போதிய சிகிச்சை இன்றி, அதற்கு வேண்டிய வளமின்றி இறந்து போனார்.
புனர் வாழ்வு பெற்ற பின் ராஜ்குமார் வவுனியா மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோடு வேலை செய்தவர். தவிர வெவ்வேறு ஊடகங்களிலும் வேலை செய்தவர்.எனக்கு ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் 2015க்கு முன்னர் என்று நினைக்கிறேன். வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில்,குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை ஆற்றுவதற்காகப் போயிருந்தேன். நிகழ்வு முடிந்த பின் ராஜ்குமார் என்னை சந்தித்தார்.2009க்குப் பின் அவர் என்னை முதன்முதலாக கண்டது அப்பொழுதுதான்.என்னிடம் எனது தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் போன்றவற்றை கேட்டார். அவருக்கு நான் அவற்றை வழங்கிக் கொண்டிருந்த பொழுது,சிறிது தொலைவில் நின்ற ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் என்னை பார்த்து அவருக்கு அதை கொடுக்காதே என்று சைகை காட்டினார். அதேபோல ஒரு கட்சிப் பிரமுகரும் அவர் கேட்பதைக்கொடுக்க வேண்டாம் என்று எனக்குச் சைகை காட்டினார். ஆனால் நான் கொடுத்தேன்.
அவர் போனபின் அந்த இருவரிடமும் கேட்டேன், ஏன் கொடுக்கக் கூடாது ?என்று. அவர்கள் சொன்னார்கள், “அவர் இப்பொழுது பச்சையின் ஆள். புனர் வாழ்வின் பின் அவர்களுடைய ஆளாக வேலை செய்கிறார்” என்று. நான் சொன்னேன் “இருக்கலாம்.புனர் வாழ்வு பெற்றவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு புலனாய்வுப்பிரிவு அவர்களோடு தொடர்புகளைப் பேணும்.அதைவிட முக்கியமாக அவர்களுக்கு வேறு ஒரு இலக்கும் உண்டு. என்னவென்றால் புனர் வாழ்வு பெற்றவர்கள் புலனாய்வுத் துறையோடு தொடர்புடையவர்கள் என்று சமூகத்தை நம்ப வைத்தால் சமூகம் அவர்களை நெருங்கி வராது. அவர்களை சந்தேகிக்கும். அவர்களைக் கண்டு பயப்படும்; வெறுக்கும், அவர்களோடு ஒட்டாது. அவர்களை தூர விலக்கி வைத்திருக்கும். இவ்வாறு ஒரு காலம் தமக்காக போராடப் போய் கல்வியை, இளமைச் சுகங்களை ,கை கால்களை, கண்களை இழந்தவர்களை,எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடப் போனார்களோ அந்த சமூகமே சந்தேகிப்பது அல்லது அந்த சமூகமே அவமதிப்பது என்பது அரசாங்கத்துக்கு வெற்றி.எனவே தன் சொந்த மக்களாலேயே அவர்கள் அவமதிக்கப்பட வேண்டும், நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்களை தோற்கடித்தவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அந்த எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றப் போகிறீர்களா? நாங்கள் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களை அரவணைக்க வேண்டும். என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று சொன்னேன்.
இறக்கும்வரை ராஜ்குமார் சந்தேகிக்கப்பட்டார். அவர் முதலில் வேலை செய்த ஒர் ஊடகத்தின் ஆசிரியர் என்னிடம் கேட்டார்,”அவர் யார்? ஒரு புதிராகவே தெரிகிறார்.அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. நம்பவும் முடியாமல் இருக்கிறது”. என்று.
ஆம்.ஈழம் சேகுவாரா கடைசி வரை சந்தேகிக்கப்படும் ஒருவராகவே இறந்தார். ஆனால் அவர் தயாரித்து இன்று தமிழர் தாயகம் எங்கும் திரையிடப்படுகின்ற அந்தக் காணொளி சந்தேகங்களுக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கேட்பது.
அதுபோல பல காணொளிகள் வரவேண்டும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல அந்த இரண்டு முதியவர்களைப்போல ஆயிரம் முதியவர்கள் எல்லாக் கிராமங்களிலும் இருப்பார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடைய கதைகளை வெளியே கொண்டுவர வேண்டும். அது ஒருவிதத்தில் கலையாகவும் இருக்கும்;அரசியலாகவும் இருக்கும்; இன்னொரு விதத்தில் யுத்த சேதங்களைக் கணக்கெடுப்பதாகவும் இருக்கும்.
இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பல ஆண்டுகளுக்கு முன் நான் கதைத்திருக்கிறேன். “இதுபோன்ற விவரங்களை அதாவது யுத்தத்தின் சேதங்களைக் கணக்கெடுக்கும் அல்லது புள்ளி விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகளை ஒரு அரசியல் செயற்பாடாக, ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுக்கலாம். கிராமங்கள் தோறும் நடமாடும் அலுவலகங்களை நிறுவி அல்லது கட்சிக் கிளைகளைப் பரப்பி, அங்கெல்லாம் கிராம மட்டத்தில் தகவல்களைத் திரட்டலாம். இது ஒருபுறம் தகவல் திரட்டுவதாகவும் அமையும். இன்னொருபுறம் கட்சியைப் பலப்படுத்துவதாகவும் அமையும்” என்று தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் கூறியிருக்கிறேன்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் சொன்னார்,அதற்கு ஓர் அரசியல் சூழல் வேண்டும் என்று.உண்மை. அதற்குரிய அரசியல் சூழல் இல்லை என்றால் அவ்வாறு திரட்டுபவர்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினைகள் வரலாம்.எனவே அதில் உள்ள ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு அந்தக் கட்சி அல்லது அமைப்பு தயாராக இருக்க வேண்டும். இதை நான் கேட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.அப்போது இருந்ததை விடவும் இப்பொழுது அரசியல் சூழல் தேறியிருக்கிறது. இனிமேல் மக்கள் துணிந்து முன்வந்து சாட்சிக் கூறக்கூடும். சான்றுகளைத் தரக்கூடும்.
தவிர ஐநாவிலும் அவ்வாறான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓர் அனைத்துலக நடைமுறையாக உள்ளது.எனவே இந்த விடயத்தில் இனி கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் துணிந்து இறங்கலாமா?
நிதிக்கான போராட்டத்தின் முதல் படி அதுதான். நீதியைப் பெறுவதற்குத் தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது.அதை ஒரு செயற்பாட்டு ஒழுக்கமாகக் கட்சிகள் செய்யலாம். அதன்மூலம் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உயிர்த் தொடர்பு உண்டாகும். அதைவிட முக்கியமாக கட்சிகள் மக்களின் துயரங்களுக்கு மேலும் நெருக்கமாக வரும்.இது கட்சிகளுக்கும் பலம். மக்களுக்கும் பலம்.
அதிலும் குறிப்பாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல அமைப்புகளுக்குள் வராத, இப்பொழுதும் நம்பிக்கைகளோடு காத்திருக்கிற, முதிய பெற்றோருக்கு அது ஆறுதலாக அமையும்.அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்காலத்தைக் குறித்த அவநம்பிக்கையோடு இறந்து போய்விட்டார்கள். இருப்பவர்களும் அவ்வாறு அவநம்பிக்கையோடு இறக்காமல் இருப்பதற்கு கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குறிப்பாக காணொளி ஊடகங்களும் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்.
செம்மணியில் அணையா விளக்கு போராட்டக் களத்தில் ,சேகரித்திருக்க வேண்டிய காணொளிகள் அவைதான்.தேசத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை உணர்ந்த எல்லா ஊடகக்காரர்களும் யு டியூப்பர்களும் கிராமங்களை நோக்கி வரவேண்டும். இந்த முதிய பெற்றோரை நேர்காண வேண்டும்.அந்த கதைகளுக்கு அதிகம் வியூவர்ஸ் கிடைக்காமல் போகலாம். அந்த கதைகளை சர்ச்சைக்குரிய காணொளி உள்ளடக்கங்களாக மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் காணொளி ஊடகங்களும் யூடியூபர்களும் ஒன்றைத் தீர்மானிக்க வேண்டும். தேசத்தைக் கட்டி எழுப்புவதா? அல்லது சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை வலிந்து தேடுவதா? வியூவர்ஸைக் கூட்டுவதற்காக சூடான செய்தியைக் கொடுப்பதா? அல்லது தேசத்துக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா?
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறுவார் “புள்ளி விவரங்கள் குருதி சிந்துவதில்லை” என்று. ஆம். கைது செய்யப்பட்ட பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? சரணடைந்த பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? யார் பிடித்தது என்று தெரியாமலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? போன்ற எல்லா விபரங்களையும் புள்ளி விபரங்களாகவன்றி ரத்தமும் சதையுமாக,கதைகளாக வெளியே கொண்டுவர வேண்டும். அந்தக் கதைகள்தான் இரத்தம் சிந்தும்.அந்தக் கதைகள்தான் தேசத்தைத் திரட்டும்.அந்தக் கதைகள்தான் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும்.நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அவ்வாறான கதைகளை வெளியே கொண்டு வரும் ஊடகங்கள்தான்.சர்ச்சைகளை உருப் பெருக்கி பார்வையாளர்களின் தொகையைக் கூட்டும் ஊடகங்கள் அல்ல. பிரபலமானவரோடு மோதி அல்லது பிரபலமானவரின் வாயைக் கிண்டி சர்ச்சையை உருவாக்கும் ஊடகங்கள் அல்ல.தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகங்கள்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உழைக்கும் ஊடகங்கள்.