கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் மூத்த அரசு அதிகாரி ஒருவருடனான அவரது உரையாடலின் கசிந்த குரல் பதிவில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பிபிசி செய்திச் சேவையால் சரிபார்க்கப்பட்ட குரல் பதிவில், பாதுகாப்புப் படையினருக்கு “கொடிய ஆயுதங்களை” பயன்படுத்தவும், “எதிர்ப்பாளர்களை எங்கு கண்டாலும் சுடவும்” உத்தரவிட்டதாக ஹசீனா கூறுவதைக் கேட்கலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2024 ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், அரசு வேலைகளில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பங்களாதேஷில் மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் குறைந்தது 1,400 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
2024 ஆகஸ்ட் 5 அன்று ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதால், போராட்டங்கள் அவரது அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
பங்களாதேஷ் அவரை நாடு கடத்துமாறு புது டெல்லியிடம் முறையான கோரிக்கையை அனுப்பிய போதிலும், அன்றிலிருந்து அவர் இந்தியாவில் இருக்கிறார்.
கிளர்ச்சியின் போது நடந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹசீனா, பங்களாதேஷில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக மேற்கண்ட குரல் பதிவினை பயன்படுத்த சட்டத்தரணிகள் திட்டமிட்டுள்ளனர்.



















