இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன.
எனினும், மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு அமைவாக ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு நிலைமை காரணமாக கல்வி அமைச்சு பாடசாலைகள் திறப்பதை ஒத்திவைத்தது.
அதன்படி, இன்று தொடங்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 22 வரை தொடரும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 23 முதல் டிசம்பர் 28 வரை கிறிஸ்துமஸ் விடுமுறைகள் இருக்கும்.
மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்திற்காக டிசம்பர் 29 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு டிசம்பர் 31 வரை தொடரும்.
அதன் பின்னர் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் முடிவடையும்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ நந்தன கனகரட்ன தெரிவித்தார்.
மேலும், இன்று தொடங்கும் மூன்றாவது பாடசாலை தவணையின் வரவிருக்கும் நாட்களில் மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் பல மேலதிக ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இந்த மேலதிக ரயில் சேவைகள் பிரதான பாதை, கரையோர பாதை, புத்தளம் பாதை மற்றும் களனி பள்ளத்தாக்கு பாதை ஆகியவற்றில் இயக்கப்படும்.
டிசம்பர் மாதத்தில் பாடசாலை மாணவர்கள் தங்கள் நவம்பர் மாதத்துக்கான மாதாத பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி ரயிலில் பயணிக்க அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
















