முழுமையான அல்லது பகுதி பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை 39 ஆக விரிவுபடுத்தும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (16) கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முந்தைய 19 நாடுகளின் பட்டியலை விரிவபடுத்தியுள்ளது.
இந்தப் பிரகடனம் முழு பயணத் தடை பட்டியலில் ஏழு புதிய நாடுகளைச் சேர்த்துள்ளது: லாவோஸ், சியரா லியோன், புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா.
லாவோஸ் மற்றும் சியரா லியோன் முன்பு பகுதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தன.
விரிவாக்கப்பட்ட பட்டியலில் பகுதி கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் 15 புதிய நாடுகளும் அடங்கும்: அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பெனின், கோட் டி’ஐவோயர், டொமினிகா, காபோன், தி காம்பியா, மலாவி, மவுரித்தேனியா, நைஜீரியா, செனகல், தான்சானியா, டோங்கா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே.
பட்டியலில் உள்ள நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
பட்டியலிடப்பட்ட நாடுகள் “பரிசோதனை, சரிபார்ப்பு மற்றும் தகவல் பகிர்வில் கடுமையான குறைபாடுகளை” வெளிப்படுத்துகின்றன என்று வெள்ளை மாளிகை கூறியது.
செவ்வாய்க்கிழமை பிரகடனம் பாலஸ்தீன ஆணையத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மீதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
எனினும், சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்கள், ஏற்கனவே உள்ள விசா வைத்திருப்பவர்கள், சில விசா பிரிவுகள் மற்றும் அமெரிக்க தேசிய நலன்களுக்கு சேவை செய்யும் தனிநபர்களுக்கு இந்த பிரகடனம் விதிவிலக்குகளை வழங்குகிறது.
வொஷிங்டன், டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தேசிய காவல்படை உறுப்பினர் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயமடைந்ததை மேற்கோள் காட்டி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது குடியேற்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிகாரப்பூர்வ விரிவாக்கம் வந்துள்ளது.

















