சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில், பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மன்று அறிக்கையினயும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர்.
இந்த போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு செல்லும் வாகனங்களின் சாரதி அனுமதிப்பத்திரம் பார்வையிட்டதுடன், பொலிஸார் பெயர்களையும் பதிவு செய்தனர்.
வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பில் பெயர் பதியப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

















