இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில்
இங்குள்ள இந்துார், கடந்த ஏழு ஆண்டுகளாக துாய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இங்கு பகிரத்புரா பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது.
குழாயில் கசிவு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. .
பகிரத்புராவில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதும், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அதனுடன் கலந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, அப்பகுதிகளில் அரசு சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது.
பிற குழாய்களில் வரும் குடிநீரை காய்ச்சி பருகவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் உயிரிழப்புக்கு காரணமான குடிநீர், பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், குடிநீருடன் கழிவுநீர் கலந்திருந்தது உறுதியானது.
அதில், குடலில் நோய்த்தொற்று உண்டாக்கி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும், ‘விப்ரியோ காலரே, ஷிகெல்லா, இ.கோலி’ பாக்டீரியாக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித் துறை மண்டல பொறுப்பாளரும், இரண்டு உதவி பொறியாளர்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் தலைமை செயலர் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பல மாதங்களாக இந்த பிரச்னை சரிசெய்யப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் கூறியதை மேற்கோள்காட்டி, இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.















