வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் திங்களன்று (05) மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முதலாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல என்று நிக்கோலஸ் மதுரோ கூறினார்.
அதேநேரம், மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.
அரை மணி நேர விசாரணைக்கு முன்னதாக, மதுரோவுக்கு ஆதரவான மற்றும் எதிரான டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.
அவர் கணுக்கால்களில் விலங்கிடப்பட்டு ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிற சிறைச்சாலை உடையுடன் நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை. நான் ஒரு ஒழுக்கமான மனிதன். நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதிதான் என்று 63 வயதான மதுரோ ஒரு மொழிபெயர்ப்பாளரின் மூலம் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் வலியுறுத்தினார்.
விசாரணைகளின் பின்னர் வழக்கு மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும்மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் உரையாற்றியபோது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடக்கே சில மைல்கள் தொலைவில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது.
அங்கு ஒரு டஜன் நாடுகள் அமெரிக்காவின் “ஆக்கிரமிப்பு குற்றத்தை” கண்டித்தன.
மேலும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறினார்.
உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ
போதைப்பொருள் பயங்கரவாதம், சதி, கொக்கெய்ன் இறக்குமதி சதி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.















