இங்கிலாந்தை தாக்கும் கோரெட்டி புயல் (Storm Goretti) மற்றும் அதனால் ஏற்படக்கூடிய கடுமையான வானிலை மாற்றங்கள் குறித்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றினால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும், பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வேல்ஸ், மிட்லண்ட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மோசமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழலில், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிர்காலத்தில் குழாய்கள் உறைவதைத் தடுக்கும் முறைகள் மற்றும் நிதி சேமிப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.
இதேவேளை, இன்று மாலை முதல் பலத்த காற்றும், இரவு முதல் கடும் பனிப்பொழிவும் ஏற்படும் என்பதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகள் வெளி உலகத்தொடர்பின்றி துண்டிக்கப்படலாம் என்றும், பறக்கும் பொருட்களால் உயிர்ச் சேதம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.















