கரூர் நெரிசல் வழக்கில் இன்று (19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விஜயிடம் விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டது.
டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில், விஜய் கடந்த 12ம் திகதி ஆஜரானார்.
அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஏழு மணித்தியாலங்கள் நேரம் விசாரணை நடத்தினர்.
விஜயிடம் விசாரணை முடியாத நிலையில், பொங்கலுக்கு பின் விசாரணைக்கு ஆஜராவதாக சி.பி.ஐ., அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், ஜனவரி 19 ஆம்திகதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பினர்.
அதை ஏற்றுக்கொண்ட விஜய், இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் நேற்று டில்லி சென்றார்.
அங்கு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார்.
இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார்.
இன்று மாலை வரை விசாரணை நடத்தவும், பல்வேறு கேள்விகளை எழுப்பவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

















