இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மோசமாக்கும் தொடர்ச்சியான ஹெக்கிங் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் சைபர் தாக்குதல்களைப் பற்றி விவாதிக்க ஒரு மன்றத்தை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், ஹெக்கிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தனிப்பட்ட விவாதத்தை அனுமதிக்கவும், ஹெக்கிங் அதிகரிப்பைத் தடுக்கவும் இம் மன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்த விடயத்தை நன்கு அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் ப்ளூம்பெர்க் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளனர்.
எனினும், பாதுகாப்பு விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது.
லண்டனில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஒப்பந்தம் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியது.
பெய்ஜிங்கில் உள்ள இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சும் இந்த விடயம் தொடர்பான கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும் ப்ளூம்பெர்க் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
தலைநகர் லண்டனில் தனது புதிய தூதரகத்திற்கான சீனாவின் கோரிக்கையை அங்கீகரிப்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கும் நிலையில், இங்கிலாந்து-சீனா உறவுகளுக்கு ஒரு முக்கியமான நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த மாத இறுதியில் பெய்ஜிங்கிற்கு விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















