முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
அவர் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வேறொரு வழக்குக்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சாகீர் ஆகிய பிரதிவாதிகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியபோது, சதொச ஊழியர்களை அவர்களின் சட்டபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













