கடந்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், சில மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் முதலாம் நிலை எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.
இந்நிலையில் , கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்க இஹல கோரளை, பாததும்பர, தொலுவ, யடினுவர மற்றும் மெததும்பர , கேகாலை மாவட்டத்தின் கேகாலை, அரநாயக்க, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனல்லை, மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கை கோரளை, உக்குவலை, ரத்தோட்டை, வில்கமுவ மற்றும் லக்கல – பல்லேகம, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, அம்பகமுவ மற்றும் நில்தண்டாஹீன்ன, இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி,
மொனராகலை மாவட்டத்தின் பதல் கும்பர, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை,
காலி மாவட்டத்தின் நியாகம ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












