இங்கிலாந்தில் மருத்துவமனை அறக்கட்டளையொன்றில் ஏற்பட்ட கடுமையான சேவை குறைபாடுகளால், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுண்டி டர்ஹாம் (County Durham) மற்றும் டார்லிங்டன் (Darlington) அறக்கட்டளை, 2023 ஆம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்ற நோயாளர்களின் மருத்துவப் பதிவுகளை மறுபரிசீலனை செய்து வருகிறது.
இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 357 பேரில், 245 நோயாளர்கள் சிகிச்சை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும். 2023ஆம் ஆண்டுக்கு முன்பு சிகிச்சை பெற்றவர்களையும் மீண்டும் ஆய்வு செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கூடுதல் நிபுணர்களை நியமிக்க தேசிய சுகாதார சேவை இங்கிலாந்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை டர்ஹாம் காவல்துறை விசாரித்து வருகிறது.
மார்பக அறுவை சிகிச்சை சேவையில் ஏற்பட்ட தவறுகள் குறித்து ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (Royal College of Surgeons ) மேற்கொண்ட ஆய்வில், கண்டறியப்படாத புற்றுநோய்கள், தேவையற்ற அறுவை சிகிச்சைகள், கீமோதெரபி வழங்கப்படாத சம்பவங்கள் உள்ளிட்ட பல குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.














