இங்கிலாந்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள சுமார் 12 இலட்சம் பேருக்கு உடல் எடையைக் குறைக்கும் வெகோவி (Wegovy) ஊசி தேசிய சுகாதார சேவை மூலம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகோவி என்ற வர்த்தகப் பெயரில் விற்கப்படும் மற்றும் நோவோ நோர்டிஸ்க் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த வாராந்திர ஊசி, GLP-1 ரிசெப்டர் ஆகோனிஸ்ட் எனப்படும் ஒரு வகை மருந்தாகும்.
இது இரத்தச் சர்க்கரை, பசி மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்தும் இயற்கையான ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது.
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுவதோடு, இதயம் மற்றும் இரத்த நாளங்களில் நேரடியாகச் செயல்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சில குறிப்பிட்ட இதயம், சுற்றோட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட, அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குவதற்கு தேசிய சுகாதார சேவையின் செலவினக் கண்காணிப்பு அமைப்பான தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம் தற்சமயம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலமாக இங்கிலாந்து முழுவதும் 12 இலட்சம் மக்கள் பயனடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












