தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்கின்றன.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகச் சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதியைக் கருத்திற்கொண்டு, இன்றும் (12) விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
பயணிகளின் வருகை மற்றும் தேவைக்கு ஏற்ப, எந்த நேரத்திலும் மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தத் தேவையான அனைத்து ஆலோசனைகளும் டிப்போக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிக்கும் பயணிகளுக்காக, மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து விசேட பேருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் நெடுஞ்சாலைப் பயணிகள் எவ்விதத் தாமதமுமின்றித் தமது இடங்களுக்குச் சென்றடைய முடியும்.
இதேவேளை, பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தி பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மேலதிக கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பயணிகள் நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களும் இணைந்து மேலதிக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.















