ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த இடத்திற்கு அருகில் கடைசியாகக் காணப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கிளாஸ்கோவின் கார்டோவன் வீதியில் (Cardowan Road)நேற்று அதிகாலை 4 மணியளவில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.
இந்த மரணத்தை ‘சந்தேகத்திற்குரியது’ என வகைப்படுத்தியுள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில், அந்தப் பகுதியில் கடைசியாகக் காணப்பட்ட 30 வயதுடைய கிராண்ட் மெக்கின்னன் (Grant McKinnon) என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அவர் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராண்ட் மெக்கின்னன் மிகவும் ஆபத்தானவர் என எச்சரித்துள்ள பொலிஸார் பொதுமக்கள் அவரை எக்காரணம் கொண்டும் நெருங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
அவரை யாராவது கண்டால் உடனடியாக ‘999’ என்ற இலக்கத்திற்கு அழைத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி, 6 அடி உயரம் கொண்ட குறித்த நபர் சிவப்பு நிறத் தொப்பி கொண்ட கறுப்பு நிற ஜாக்கெட் மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்.















