அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி மிரட்டல்களில் இருந்து பிரித்தானியாவின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க, ஐரோப்பிய ஒன்றிய பாணியிலான ‘வர்த்தக பசூக்கா’ (Trade Bazooka) ஒன்றை உருவாக்குமாறு வர்த்தக தலைவர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
டிஜிட்டல் சேவை வரி விவகாரத்தில் பிரித்தானியா மீது கடும் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு போதுமானதாக இல்லை என பிரித்தானிய வர்த்தக சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.
மிரட்டல் விடுக்கும் நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சந்தை அணுகுமுறையை கட்டுப்படுத்துதல் மற்றும் முதலீடுகளைக் கண்காணித்தல் போன்ற அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டத்தை இயற்றுமாறு பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா விளங்கும் நிலையில், இத்தகைய ராஜதந்திர மிரட்டல்கள் நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் என வர்த்தக அமைப்புகள் எச்சரித்துள்ளன.
வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக இறுதி கட்ட நடவடிக்கையாக புதிய கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் ( Chris Bryant) தெரிவித்துள்ளார்.













