தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மக்கள் நலனுக்காகத் தமிழக அரசுக்கு வழங்கிப் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இல்லற வாழ்க்கையை நிறைவு செய்து, மனைவியின் மறைவுக்குப் பின் வீட்டை விட்டு வெளியேறிய இவர், அன்றிலிருந்து யாசகம் பெறத் தொடங்கினார்.
தனது தேவைகளைச் சுருக்கிக்கொண்டு, யாசகம் மூலம் கிடைத்த வருவாயில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40 அரசுப் பள்ளிகளுக்கு நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குடிநீர் இயந்திரங்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியதற்காக, சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்ப்பட்ட முதல் யாசகர் இவராவார்.
கள்ளக்குறிச்சி தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நேரில் சென்று கொரோனா, வெள்ளம் மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிகளை இவர் வழங்கியுள்ளார்.
தற்போது விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தனது பங்களிப்பாக 10,000 ரூபாயை இந்த முதியவர் வழங்கியுள்ளார்.
எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி, தனது வாழ்வையே சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள இவரது மனிதாபிமானச் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
















