நாட்டில தற்சமயம் நிலவும் மோசமான வானிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி அங்கு மொத்தமாக 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டதுடன், உயிரிழப்பு சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 நபர்களும், கொழும்பு மாவட்டத்தில் 1,051 குடும்பங்களைச் சேர்ந்த 4,566 நபர்களும், இரத்தினபுர மாவட்டத்தில் 1,204 குடும்பங்களைச் சேர்ந்த 4,558 நபர்களும், களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 நபர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 நபர்களும், காலி மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 7 நபர்களும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பேரிடரினால், 2 வீடுகள் முழுமையாகவும், 836 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வீடுகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன; அங்கு 2 வீடுகள் முழுமையாகவும், 530 வீடுகள் பகுதியளவிலும் சேதடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 8 மாவட்டங்களைச் சார்ந்த 34 பிரதேச செயலகப் பிரிவுகள் அண்மைய பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.














