பிரிட்டனில் நம்பகமான உள்ளூர் செய்தி ஊடகங்கள் இல்லாத பகுதிகளில் சமூக ஊடகக் குழுக்கள் தவறான தகவல்களை அதிகளவில் பரப்புகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த நிலைமை பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் “நம்பிக்கையின் கொலையாளி” என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆய்வை சமூக சந்தை அறக்கட்டளை (Social Market Foundation – SMF) என்ற சிந்தனைக் குழு மேற்கொண்டது. ஆய்வில், பேஸ்புக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) மற்றும் நெக்ஸ்ட்டோர் தளங்களில் வெளியான 1.25 இலட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
ஆய்வின் படி, பிரிட்டனில் சுமார் 44 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் “செய்தி பாலைவனங்கள்” (News Deserts) எனப்படும், உள்ளூர் செய்தி சேவைகள் இல்லாத பகுதிகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் தவறான தகவல்கள், உள்ளூர் ஊடகங்கள் செயல்படும் பகுதிகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக காணப்பட்டன.
குடியேற்றம் மற்றும் இஸ்லாமியர்களை எதிர்த்த தவறான தகவல்களே அதிகமாக பரவியதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், உள்ளூர் தேர்தல்களை முன்னிட்டு தவறான தகவல்கள் கணிசமாக அதிகரித்தன. தேர்தலுக்கு முன், செய்தி தொடர்பான பதிவுகளில் தவறான தகவல்களின் விகிதம் 8.2 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாக உயர்ந்தது. இது 56 சதவீத அதிகரிப்பாகும்.
இந்த கண்டுபிடிப்புகள் அரசியல் வட்டாரங்களிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. உள்ளூர் பத்திரிகைத்துறையை வலுப்படுத்தவும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கை தேவை என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















