வண்ணங்கள், நடனம் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசை நட்சத்திரமான ஷகீராவின் நிகழ்ச்சி ஆகியவற்றால் நிறைந்த தொடக்க விழாவுடன் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம் மெக்சிகோ நகரில் வியாழன் இரவு (இலங்கையில் வெள்ளிக்கிழமை காலை) தொடங்கியது.


40 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் முதல் உலகக் கிண்ணத்தை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மெக்சிகோ நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தை வந்தடைந்தனர்.
ஆனால், மைதானத்திற்கு வெளியே நிகழ்வை குழப்பும் நோக்கில் தீவிரப் போராட்டக்காரர்கள் முயன்ற நிலையில், பாதுகாப்புப் படையினரின் கடுமையான பதிலடி நடவடிக்கையால் இடையிடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டன.
82,000 பேர் அமரக்கூடிய மைதானத்தைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால் அருகிலுள்ள மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
சுமார் 800 போராட்டக்காரர்களைக் கொண்ட இரண்டு குழுக்களிலிருந்து முகமூடி அணிந்த கிட்டத்தட்ட 200 பேர் பிரிந்து சென்று சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், ஆனால் நிலைமை காவல்துறையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்றும் மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மெக்சிகோவின் போதைப்பொருள் போரில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் ஆசிரியர்களும், நாடு உலக அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் பல்வேறு போராட்டங்களில் பேரணி நடத்தினர்.

எவ்வாறெனினும், ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் முதல் நாளின் உண்மையான முக்கிய நிகழ்வாக மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மோதலே அமைந்தது.
இதில் போட்டியை நடத்திய நாடு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இது மிகுந்த பரபரப்பு நிறைந்த ஒரு ஆட்டமாக இருந்தது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மெக்சிகன் ரசிகர்கள் ஏராளமான சோம்பிரோக்களை காற்றில் வீசினர்.
( Sombrero – அகன்ற விளிம்புகளைக் கொண்ட மெக்சிகன் பாரம்பரியத் தொப்பிகள்)
போடடியின் ஒன்பதாவது நிமிடத்தில் மெக்சிகோவுக்காக ஜூலியன் குவினோன்ஸ் கோல் அடித்து, சொந்த நாட்டிற்கு 1-0 என்ற முன்னிலையை வழங்கியபோது, 80,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உண்மையிலேயே உற்சாகத்தில் திளைத்தனர்.
29 வயதான குவினோன்ஸ் கொலம்பியாவில் பிறந்தவர், தற்போது சவுதி லீக்கில் விளையாடுகிறார்.
சவுதி புரோ லீக்கில், இந்த சீசனில் அதிக கோல் அடித்தவர் இவரே.
எல் ட்ரி அணிக்காக உலகக் கிண்ணத்தில் அறிமுகமான ஆறு தொடக்க வீரர்களில் இவரும் ஒருவர்.
ஆட்டம் முழுவதும் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்த முற்சித்த போதிலும், மெக்சிகோ தங்களது முன்னிலையை இரட்டிப்பாக்கி இறுதியில் போட்டியின் 67 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது.
ரவுல் ஜிமெனெஸ் அவர்களுக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

ஒரு உலகக் கிண்ணத்தின் தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ விளையாடுவது இது எட்டாவது முறையாகும்.
மேலும், ஒரு தொடக்க ஆட்டத்தில் அவர்கள் பெற்ற முதல் வெற்றியும் இதுவே.
இதற்கு முன்னர், 2010 உலகக் கிண்ணத்தில் அப்போதைய போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் உட்பட, ஐந்து முறை தோல்வியும் இரண்டு முறை சமனும் கண்டிருந்தனர்.
மேலும், அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து மெக்சிகோ நடத்தும் 48 அணிகள் கொண்ட இந்தத் தொடருக்கு முன்னதாக, மிகவும் அவசியமான புனரமைப்பைப் பெற்ற அஸ்டெகா மைதானம், மூன்று உலகக் கோப்பைகளை நடத்திய முதல் மைதானமாக ஆனது.
இது இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு ஒரு பொருத்தமான வழியாகவும் அமைந்தது.
மெக்சிகோவிற்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருந்தபோதிலும் ஒரு தொடக்க உலகக் கிண்ணப் போட்டியில் அதிகபட்சமாக மூன்று சிவப்பு அட்டைகள் (தென்னாப்பிரிக்காவிற்கு இரண்டு, மெக்சிகோவிற்கு ஒன்று) காட்டப்பட்டதால், இப்போட்டி களங்கம் அடைந்தது.















