அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய உடன்படிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஈரான் தரப்பு இந்தத் திகதியை இன்னும் உறுதிப்படுத்தாததால், ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் குறித்துக் குழப்பம் நீடிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாளான இன்று (14) இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஆதரவாகப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இரு நாடுகளும் சமாதான உடன்படிக்கைக்குச் சம்மதித்துள்ளதாகவும், இன்று மின்னணு முறையில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமாபாத் மேற்கொண்டு வருவதாகவும், இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஈரான் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
இது குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) கருத்துத் தெரிவிக்கையில், ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும், ஆனால் அது அடுத்த சில நாட்களில் (Coming days) நடக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு முன்பாகவும், முக்கிய சதுக்கங்களிலும் தீவிரப் போக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கு (Abbas Araqchi) எதிராக, “அராக்ஸியே வெட்கப்படு, அமெரிக்காவை நம்புவதைக் கைவிடு!” என முழக்கமிட்டதாகச் சமூக ஊடக வீடியோக்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியிருந்தன.
அமெரிக்காவின் கடுமையான குண்டுவீச்சுகள் ஈரானின் இராணுவக் கட்டமைப்பைப் பெருமளவில் சேதப்படுத்தியிருந்தாலும், அங்குள்ள தீவிரப் போக்குடைய ‘புரட்சிகர காவல் படை’ முன்னெப்போதையும் விட தற்போது அதிக செல்வாக்குடன் விளங்குவதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் 20 சதவீதத்தைக் கொண்டு செல்லும் முக்கிய கடல் வழிப்பாதையான ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளது.
இந்தச் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் அனைத்து நாடுகளின் போக்குவரத்திற்காகவும் உடனடியாகத் திறந்துவிடப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நகர்ந்தாலும், களத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்கள் இன்னும் ஓயவில்லை.
சனிக்கிழமை அதிகாலையில், ஹோர்முஸ் நீரிணையை நோக்கி வந்த ஈரானின் பல தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களை (Drones) அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.
அதேவேளை, தாங்கள் இந்த அமெரிக்க – ஈரான் ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு அல்ல என்று அறிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் உள்ள ஈரானின் நட்பு அமைப்பான ஹிஸ்புல்லாவின் (Hezbollah) 70-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்திப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.



















