யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவின் நாகபட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்வதற்கு முற்பட்டிருந்த 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது உடைமையில் வைத்திருந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் நாகப்பட்டணத்திற்கு நேற்றையதினம் பயணிக்கவிருந்த 146 பயணிகளில் சிலர் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களை சோதனைக்கு உட்படுத்திய போது இந்திய பிரஜைகளாகிய இருவரின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் கைபபற்றப்பட்டன. அதனை அடுத்து அவர்கள் இருவரையும் சுங்க பிரிவினர் கைது செய்தனர்.
பயணிகளில் மேலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட 09 இலங்கையர்கள் மற்றும் 17 இந்தியர்களுமான 26 பேரை, சுங்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தங்க கட்டிகளை உடைமையில் வைத்திருந்த இருவர் மற்றும் சந்தேகத்திற்கு இடமான 26 பேருமாக மொத்தம் 28 பயணிகள் தவிர்ந்த ஏனைய 118 பயணிகள் இந்திய நோக்கி பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தங்க கட்டிகளை விழுங்கி கடத்த முற்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகத்தில் 26 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஸ்கானிங் செய்ய சுங்க திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன் அடிப்படையில் நேற்றிறரவு கைது செய்யப்பட்ட 26 பேரில் 17 பேரை பாதுகாப்புடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து ஸ்கானிங் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது 17 பேரில் இரண்டு இலங்கை பெண்கள் மற்றும் நான்கு இந்திய ஆண்களுமாக ஆறு பேர் தங்க கட்டிகளை விழுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தங்க கட்டிகளை விழுங்கியவர்களின் தங்க கட்டிகளை மீட்க வைத்தியசாலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்,ஏனைய 09 பேர் தொடர்பிலும் சுங்க திணைக்களம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை 26 பேரில் நேற்றையதினம் 17 பேருக்கு ஸ்கானிங் செய்யப்பட்ட நிலையில் ஏனைய 09 பேருக்கும் இன்றையதினம் ஸ்கானிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














