நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசேட இன்று (07) கூற்றொன்றை முன்வைத்து அவர் கருத்து வெளியிட்டார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நேர்ந்த உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் திறமையின்மையுமே முக்கியக் காரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.”சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது குறிப்பிட்டிருந்தார். எனவே, தற்போதைய அரசாங்கமும் இந்தச் சம்பவத்திற்கு முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இன்றைய சம்பவத்தின் மூலம் அரசாங்கத்தின் ‘முறைமை மாற்றம்’ முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது என்றார்.
நாட்டிற்குள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரசாங்கத்திற்கு முடியாதா என்றும், சிறைச்சாலைகளுக்குள் மனிதாபிமான ரீதியிலான நிர்வாகத்தை ஏன் முன்னெடுக்க முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டு மக்கள் இதனை அவதானித்துக் கொண்டிருப்பதால் அரசாங்கம் இதற்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமான, பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்திற்கு சாதகமாக அறிக்கைகளைத் தயாரிக்கும் குழுவாக அமையாமல், உண்மை நிலையை வெளிக்கொணரும் வெளிப்படையான விசாரணைக் குழு அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு என்பது கல்வி, பொருளாதாரம், சிறைச்சாலை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த விடயமாகும் என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், “அன்று அகந்தை மனப்பான்மையுடன் தேசிய பாதுகாப்பு குறித்து மேலதிக வகுப்புகள் நடத்துகிறோம் என்று கூறிய இந்த அரசாங்கத்தின் கீழ் இன்று தேசிய பாதுகாப்பு வீழ்ச்சி கண்டுள்ளது” என சாடினார்.
மேலும், அரசாங்கம் தனது அகந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு, நேர்மையுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.














