ஈரான் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, புதன்கிழமை வர்த்தகத்தின் நிறைவு நேரத்திற்குப் பிந்தைய வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது.
புதன்கிழமை இரவே ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்ததைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலைக் குறியீடுகள் இரண்டும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலான காலகட்டத்தில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் நிலைபெற்றன.
அதன்படி, புதன்கிழமை வர்த்தக முடிவில் 5%-க்கும் அதிகமாக உயர்ந்து 78.02 அமெரிக்க டொலர்கள் என்று நிலைபெற்றிருந்த பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் (Brent crude futures), பின்னர் பீப்பாய் ஒன்றுக்கு 79.28 அமெரிக்க டொலர்கள் என்ற விலையில் வர்த்தகமாயின.
அதேபோல், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள்,73.52 அமெரிக்க டொலர்கள் என்ற முந்தைய நிலைபெற்ற விலையிலிருந்து உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 74.76 அமெரிக்க டொலர்கள் என்ற விலையில் வர்த்தகமாயின.
ஹார்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், ஈரான் மீது அமெரிக்கா புதன்கிழமை இரவும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்திலும் மசகு எண்ணெய் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.















