இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான VietJet, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையிலான தனது முதலாவது நேரடி விமான சேவையை நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
இந்த நேரடி விமான சேவையின் ஆரம்பம், இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள், VietJet விமான சேவை இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதை வரவேற்றதுடன், அதன் புதிய சேவைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கை மற்றும் வியட்நாம் அரச தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் வெற்றிகரமான தொடர்ச்சியாகவே இந்த நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
VietJet இன் இந்த புதிய விமானப் பாதை, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
இதன் அடிப்படையில், இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாப் பயணங்களை அதிகரிக்கும் நோக்கில், இரு தரப்பினரும் இணைந்து புதிய சுற்றுலாப் பொதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக, இரு நாடுகளுக்குமிடையிலான மத மற்றும் கலாசாரத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு மதச் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், கலாசார, சுகாதார மற்றும் சாகசச் சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
VietJet விமான சேவை, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை — செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் — முன்னெடுக்கவுள்ளது.
VietJet இன் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக ஹோ சி மின் நகரம் விளங்குவதால், இலங்கைப் பயணிகள் வியட்நாமின் ஏனைய நகரங்களுக்கும், கிழக்காசியா, தென்கிழக்காசியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இலகுவாக பயணிக்க இந்த புதிய சேவை வாய்ப்பளிக்கும்.











