இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனைகளின் போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே கண்டறியப்பட்டுள்ளதாகவும் 42.5% இல் டெங்கு நுளம்புக் குடம்பிகள் பாடசாலை வழக்கங்களில் காணப்படுபவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 250,477 வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் பாடசாலை வளாகங்களிலேயே அதிகளவிலான டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், சோதனை செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 38.4% இலும், அரச நிறுவன வளாகங்களில் 28.1% இலும், மத வழிபாட்டுத் தலங்களில் 25.9% இலும் மற்றும் வீடுகளில் 9.2% இலும் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, நேற்று (17) வரையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74,478 ஆகும்.
அவற்றுள், ஜூலை மாதத்தின் கடந்த 17 நாட்களில் மாத்திரம் 19,100 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் தொடர்ந்தும் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதுடன், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 15,596 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.















