மலையக மக்களுக்கான தபால் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கலந்து கொண்டார்.

இதன்போது மலையக மக்கள் தபால் சேவையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்துவது, புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் மலையகப் பகுதிகளில் சீரான தபால் விநியோகத்தை உறுதிப்படுத்துதல், தற்போது சேவையாற்றும் தபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் தோட்டப் பகுதிகளுக்கு தபால் சேவையை முறையாக கொண்டு செல்வதில் உள்ள நடைமுறை சவால்கள், மலையக மக்களுக்கான முகவரி முறைமையை மேம்படுத்துதல் மற்றும் மலையகத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு தபால் முத்திரைகளை வெளியிடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல், கிட்ணன் செல்வராஜ் உள்ளிட்டோர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டு மலையக மக்களுக்கான தபால் சேவையை நவீனமயப்படுத்தவும் அணுகல் வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.













