ஜப்பானின் சிபா (Chiba) மாகாணத்தில் பெய்த மிகக் கடுமையான கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிபா மாகாணத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் 360 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக முக்கிய வீதிகள் மற்றும் தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கிப் போக்குவரத்துச் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
அத்துடன் பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நால்வரில் ஒருவர் வெள்ள நீரில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நிலைமை மோசமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை வேகப்படுத்த ஜப்பான் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
“என் வாழ்நாளில் பல இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டிருக்கிறேன்; ஆனால், இதுபோன்றதொரு மோசமான சூழ்நிலையை இதுவரை கண்டதில்லை” எனச் சிபா மாகாண ஆளுநர் தோஷிஹிட்டோ குமாகாய் கவலை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, நிலப்பரப்புப் போக்குவரத்துகள் அனைத்தும் தடைப்பட்டதால், டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் (Narida Airport) சுமார் 7,000 பயணிகள் வெளியறே முடியாமல் சிக்கித் தவித்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








