வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (WSJ) செவ்வாயன்று (18) செய்தி வெளியிட்டது.
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான அந்த அறிக்கை, ஆசியாவிற்கான தனது அடுத்த பயணத்தின்போது கிம்மை நேரில் சந்திப்பது குறித்து ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் விவாதித்துள்ளதாகத் தெரிவித்தது.
இப்பயணம், சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் கூடும் நவம்பர் மாதத்தில் நடைபெறக்கூடும்.
அந்த அறிக்கையின்படி, ட்ரம்ப்-கிம் சந்திப்புக்கான முறையான திட்டமிடல் எதுவும் தற்போது நடைபெறவில்லை.
இருப்பினும், ட்ரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் இரு தலைவர்களும் மூன்று முறை சந்தித்திருந்த நிலையில், மற்றொரு உச்சிமாநாட்டில் ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது, கிம்முடன் நேரடியாக ஈடுபடுவதற்கான புதிய முயற்சியை உணர்த்துகிறது.
ட்ரம்பும் கிம்மும் “பொருத்தமான நேரத்தில்” சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்துக் கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, ஐக்கிய நாடுகள் சபைக்கான வட கொரியத் தூதரகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
வட கொரியத் தலைநகரான பியோங்யாங் (Pyongyang) இன்னும் இது தொடர்பில் பதிலளிக்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கூறிய கருத்தை மறுத்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கான தனது கோரிக்கைக்கு வட கொரியத் தலைவர் பதிலளித்துள்ளதாக திங்களன்று தெரிவித்தார்.
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கான செலவு மற்றும் வட கொரியத் தலைவருடனான தனது உறவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அப்பயிற்சிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு பென்டகனுக்கு அவர் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.














