நடிகை டாப்ஸி நடித்துள்ள ‘காந்தாரி’ திரைப்படம் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆக் ஷன் த்ரில்லர் படமான இதை தேவஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். கனிகா தில்லான் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்வஸ்திகா முகர்ஜி, மிதா வசிஷ்ட், சாயா கதம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்.3-ம் திகதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இந்நிலையில் எழுத்தாளர் கல்யாண் பண்டி என்பவர் இப்படத்தின் கதை, 2019-ம் ஆண்டு தான் எழுதி பதிவு செய்த கதையை போன்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.’கடத்தல் கும்பலிடம் சிக்கிய தனது குழந்தையை மீட்கப் போராடும் ஒரு தாய் பின்னர் சக்திவாய்ந்த போராளியாக மாறுவதுதான் அந்தக் கதையின் மையக்கரு. இந்தக் கதையை அப்போது வூட் நிறுவனத்தில் இருந்த மோனிகா ஷெர்கில் என்பவரிடம் பகிர்ந்தேன். பின்னர் 8 பக்க ஸ்கிரிப்ட் மற்றும் கதையின் சுருக்கத்தை அனுப்பினேன். மோனிகா ஷெர்கில் இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை கனிகா தில்லானின் நிறுவனம் மறுத்துள்ளது. ‘காந்தாரி’ முற்றிலும் அசல் படைப்பு என்றும், அதன் கதை மற்றும் திரைக்கதை முழுவதும் கனிகா தில்லானுடைய சொந்தப் படைப்பு என்றும் தெரிவித்துள்ளது.



















