நேபாளத்தின்திபெத் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு ரசுவா மாவட்டத்தில் இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளனர்.
இவர்களில் குறைந்தது 105 இந்தியர்களும் அடங்குவர்.
வெள்ள நீர் கீழ்நோக்கிப் பாய்ந்து வருவதால், நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திபெத் பகுதியிலிருந்து காலை 9 மணியளவில் ‘போடே கோஷி’ (Bhote Koshi) ஆற்றில் பெருவெள்ளம் பாய்ந்து வந்ததால், டிமுரே (Timure) மற்றும் சியாப்ரு பெசி (Syapru Besi) ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கியிரோங் (Gyirong) எல்லைப் பகுதிக்கு அருகே திபெத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் உயிரிழந்ததாகவும், சிலர் காணாமல் போனதாகவும் சீனாவின் அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ரசுவாவில் பெய்த கனமழையால் இது ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று நேபாளத்தின் வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு கூறியது.
அதே சமயம், திபெத்தியப் பகுதியில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டின.
பனியாற்று ஏரி உடைப்பு வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக ‘தி காத்மாண்டு போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், அப்பகுதியில் ஆறுகள் சீறிப் பாய்வது காட்டப்பட்டது.
அவற்றில் ஒன்றில், வெள்ள நீர் ஒரு பாலத்தை அடித்துச் செல்வது தெரிந்தது.
மற்றொரு காணொளியில், பின்னணியில் மக்கள் பீதியுடன் அலறிக்கொண்டு ஓட, ஒரு வீடு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுவது காட்டப்பட்டது.













