நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு மலைப்பகுதிகளை உள்ளடக்கிய, வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 1,500 ஹெக்டேர் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு, நிலையான சுற்றுலா மேம்பாடு மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த நிலப் ஒதுக்கீடு தொடர்பான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, நுவரெலியா சுற்றுலா வலயத்திலுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிகளை விரைவுபடுத்தவும், கழிவுநீர் அகற்றும் அமைப்புகளை முறைப்படுத்தி நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியான கள ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகோடி, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவிராச்சி, நுவரெலியா மேயர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவவல மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்ற இக்கூட்டத்தில், நிலச்சரிவுகளைக் கட்டுப்படுத்தவும் சட்டவிரோதக் காடழிப்பைத் தடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இயற்கை அடையாளத்தைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் உகந்த சுற்றாடல் நட்புடைய நுவரெலியாவை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் எனச் சுற்றாடல் பிரதி அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.














